குஜராத் மாநிலத்தில் 1400 கோடி ரூபாய் கிரிக்கெட் சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர். இருந்தபோதும் இதுதொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்ய முடியவில்லை.

லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து செயல்படும் புக்கிகள் மூலம் இந்த சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம்-மின் பங்கு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

ஆகாஷ் ஓஜா என்பவரது ஆதார் மற்றும் பான் எண்ணை வைத்து போலியாக துவக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ. 170,70,43,359.85 க்கு (சுமார் ரூ.170 கோடி) பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்த போலீசார் இதுதொடர்பாக நான்கு பேர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகிறது.

குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ராகேஷ் ராஜ்தேவ், கன்னா, ஆஷிக் என்கிற ரவி ஹஸ்முக் படேல் மற்றும் கர்மேஷ் கிரித் படேல் ஆகியோர் மீது அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று 11 போலி வங்கிக்கணக்குகள் துவங்கப்பட்டு அதிலிருந்து சுமார் 1800 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 1400 கோடி ரூபாய்க்கான பரிவர்த்தனை தொடர்பாக விசாரணையில் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு பந்து வீசப்பட்ட பின் சுமார் 6 நொடி தாமதத்திற்குப் பின்பே தொலைக்காட்சியில் நேரலையில் தெரியும் என்பதால் இந்த இடைவெளியை பயன்படுத்தி மைதானங்களில் அமர்ந்திருக்கும் புக்கிகள் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு சூதாட்டத்தில் மோசடி செய்து வந்ததாகவும் இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை இவர்கள் லாபமாக ஈட்டி வந்ததாகவும் தெரிகிறது.

மோசடியாக பெறப்பட்ட பணத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததுடன் டீ செலவுக்காக மட்டுமே சுமார் 50 லட்ச ரூபாய் செலவு செய்திருப்பதாக கணக்குகளை ஆய்வு செய்த ஆடிட்டர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ராகேஷ் ராஜ்தேவ் துபாய் வழியாக எகிப்து தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய கன்னா, ஆஷிக் என்கிற ரவி ஹஸ்முக் படேல் மற்றும் கர்மேஷ் கிரித் படேல் ஆகிய மூவரும் துபாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1400 கோடி ரூபாய் கிரிக்கெட் சூதாட்ட மோசடி தொடர்பாக முக்கிய ஆவணங்கள் மற்றும் தடயங்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் சேகரித்த போதிலும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.