புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது.

சிங்கபூரைச் சேர்ந்த ஏர் ஸபா என்ற விமான நிறுவனம் இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

கோவை மற்றும் பெங்களூரில் இருந்து புதுவை விமான நிலையத்திற்கு நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இதை புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்..

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏர் ஸபா விமான நிறுவன மேலாண் இயக்குனர் முருகப்பெருமாள், “தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தவிர, திருப்பதி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “19 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய வகையில் இருக்கும் இந்த L-410NG ரக விமானத்தில் பயணம் செய்ய ஒருவருக்கு 2000 முதல் 2500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்காக செக்கஸ்லோவாக்கியா நாட்டில் இருந்து 5 விமானங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்திய விமான போக்குவரத்து துறையிடம் இதற்கான அனுமதிக்காக விண்ணப்பிக்கப் படவுள்ளதாக கூறிய அவர் இதற்கான அனுமதி கிடைக்க குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

தீபாவளியை ஒட்டி இந்த வழித்தடங்களில் விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம் சென்னையில் இருந்து புதுவைக்கு தினமும் காலை மற்றும் மாலை வேலையில் தலா ஒரு விமானம் என இரண்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

மற்ற வழித்தடங்களில் தினமும் ஒரு முறை மட்டுமே விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த விமான சேவை பெரிய விமான சேவை நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.