சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் பயணிகள் ரெயிலில் பட்டாசுகளை எடுத்துச்செல்லக்கூடாது, மீறி  கொண்டு சென்றால் சிறை தண்டனை- அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.

வரும் 14ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நகரங்களில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டும் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில்,  ரெயில்களில் செல்லும் பயணிகள், பட்டாசுக்களை கொண்டு செல்லக்கூடாது என, எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும்,  ரெயில்வே போலீசார்   எழும்பூர் ரெயில் நிலையத்தில்  பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கி, பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர்.

இதையடுத்து ரயில்வே காவல்துறையினர் கூறியதாவது,   ‘பயணிகள் யாரும் ரெயிலில் பட்டாசு எடுத்து செல்ல செல்லக்கூடாது என்றும், மீறி பட்டாசு எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்’ , இதை காவல்துறையினர் ரயில் நிலையங்களில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  தீபாவளி பண்டிகைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில்வே பாதுகாப்படை மற்றும் ரெயில்வே போலீசார் சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,   எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெய வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் மோகன், பத்ம குமாரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரோஜ் குமார், மாரியப்பன்  ஆகியோர் தெரிவித்தனர்.