சென்னை: ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி விழாவுக்கு  தடை விதிக்க மறுத்த  பசுமை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவை கோலாகலமாக நடத்தி வருகிறார். இந்த விழாவில்  உலகம்முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு, ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிலையில், கோவை ஈஷா மஹாசிவராத்திரி விழாவைத் தடை செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.  சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்யக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நேற்று (நவம்பர் 9) தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில்,  விழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த பசுமை தீர்ப்பாயம், ”வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதிகள் பெற்று கொண்டு மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம்” ஒலி மாசு ஏற்படுத்தாமல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை கடந்த 25 ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இந்த விழாவில் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இந் தநிலையில் ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி விழாவை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மகா சிவராத்திரி விழாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பை ஈஷா மையம் வரவேற்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.