மதுரை:  அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்,  காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களை மரியாதையுடனும், தோழமை யுடனும் போலீஸார் நடத்த வேண்டும், இதை உடனே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சாத்தான்குளம்  ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்தா ஜாமின் மனு மீதான விசாரணையின்போது,  அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், காவல்நிலையங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்தப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுப்பிரமணியம்  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் ஜூலை 2 முதல் 130 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  தந்தை, மகன் கொலையில் மனுதாரர் முக்கிய குற்றவாளி, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். எனவே,  அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகள கலைக்க வாய்ப்புள்ளது என்றார்.

இதையடுத்து, ஸ்ரீதரின் ஜாமினை தள்ளுபடி செய்த நீதிபதி, சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மனுதாரர் சிபிஐ விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று உத்தரவிட்டார்.

மேலும்,  காவல் நிலையங்களில் நடைபெறும் மரணங்கள் மனிதத்தன்மை அற்றவை. ஜனநாயகத்துக்கு எதிரானவை. காவல் நிலைய மரணங்கள் முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரசு துறைகளில் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். அரசு ஊழியர்கள், அதிலும் குறிப்பாக காவல்துறையினர் பொதுமக்களிடம் மரியாதையுடனும், தோழமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில்தான்  காவல் நிலைய மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன.

காவலர்களிடம் இந்த  அணுகுமுறை இல்லாததால் மக்கள் காவல் நிலையம் செல்ல அஞ்சுகின்றனர். எனவே,  தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், புகார் அளிக்க வருவோரின் உரிமைகள் குறித்து காவல் நிலையங்களில் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும். மேலும்,  அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி, அந்த கேமராக்கள் முறையாக இயற்குவதை உறுதிப்படுத்த வேண்டும். விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவல் நிலையத்தில் பொதுமக்களை மோசமாக நடத்துவது, காரணம் இல்லாமல் நீண்ட நேரம் காக்க வைப்பது போன்றவற்றை தவிர்கக வேண்டும்.

இது தொடர்பாக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.