சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும்  வகையிலான சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக பாஜக வெளிநடப்பு செய்தது.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று ஊட்டியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் நடவடிக்கையை குறைக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.  இதைத் தொடர்ந்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த மசோதா  ஆளுநரின் ஒப்புதலுக்கே அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த மசோதாவுக்கு, அதிமுக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, மாநில அரசின் முதலமைச்சரை பல்கலைக்கழங்கங்களின் வேந்தராக நியமிப்பதில் என்ன தவறு? என்றுகேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், இந்த ச் சட்ட முன்வடிவை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறி, தனது கட்சி உறுப்பினர்களுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதைத்தொடர்ந்து அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.

குஜராத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டமா என்று  என்று கூறியவர்  மசோதாவை எதிர்த்து வெளிநடப்பு செய்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் வேறு காரணம் சொல்லி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார் ஆனால் மற்ற கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உரை யாற்றினர்.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநருக்கே மாநில அரசு அனுப்பி வைக்கிறது.