சென்னை

சிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவி ஏற்றார்.  ஆயினும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. அதன் பிறகு அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்து தர்மயுத்தம் தொடங்கினார்.  அதன் பிறகு மூன்றாக உடைந்த அதிமுக வில் தினகரன் அணி அமமுக என்னும் கட்சியைத் தொடங்கினார்.

தற்போது எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அணி இணைந்துள்ளது.   ஊழல் வழக்கில் நான்காண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா விரைவில் விடுதலை பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.   அவர் விடுதலை பெற்ற பிறகு மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இது குறித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “சசிகலாவைக் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் சசிகலாவை அதிமுக கட்சியில் இருந்து பொதுக்குழு நீக்கியது.   எனவே கட்சியின் மூத்த தலைவர்கள் இணைந்து இது குறித்து முடிவு செய்வார்கள்.  அதுவே சரியான முடிவாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.