சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடன ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்திய திமுக, அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. விசிகவிற்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் கையெழுத்தானது.  தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர். அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதுபோல, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ல் ஒதுக்கப்பட்ட தொகுதிகளான  திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதி களே தற்போதும்  ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கரூர் (ஜோதிமணி), திருச்சி (திருநாவுக்கரசர்) மற்றும் திருவள்ளூர் (ஜெயக்குமார்)  ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே மனக்கசப்பு தொடர்வதால், இந்த தொகுதிகளில், வேட்பாளர்களை மாற்ற வேண்டும் அல்லது, வேறு தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என காங்கிரஸ் தலைமைக்கு திமுக சார்பில் நெருக்கடி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் மற்றும் அதில் போட்டியிடும்  வேட்பாளர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிடன ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாட்டில் 9 + 1  (புதுச்சேரி) தொகுதிகளின் பட்டியலை அகிய இந்திய கமிட்டியின் ஒப்புதலுக்காக தமிழக கமிட்டு அனுப்பி வைத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் அளித்த பிறகு, நாளை காலை காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ஐயூஎம்எல், கொமதேக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில்  திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேமுதிக எந்த அணியுடன் கூட்டணி சேருகிறது என்பது இதுவரை உறுதியாகாத நிலையில், அது தனித்து போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக கூட்டணியைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் சில சிறிய கட்சிகள் மட்டுமே இணைந்துள்ள நிலையில், பாமக, தேமுதிக கட்சிகள்  அதிமுக மற்றும் பாஜகவுடன் பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் , ஓபிஎஸ் அணிகள் இணைந்துள்ளன. இந்த அணிகளுக்கு தலா  4 தொகுதிகள் ஒதுக்க பாஜக தலைமை முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், ஏற்கனவே அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களைகட்ட தொடங்கியுள்ளது.