டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ்  கட்சிக்கும் ஆம்ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.  5 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு  செய்யப்பட்டு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான முகுல் வாஸ்னிக் கூறுகையில், “டெல்லி மக்களவையில் 7 இடங்கள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சி புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய 4 இடங்களில் போட்டியிடுகிறது; சாந்தினி சவுக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய 3 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என கூறினார்.

நாடாளுமன்ற  தேர்தல் தேதி  மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல், மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை கூட்டணி, தொகுதி பங்கீடு பணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  இதற்கிடையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியிலும்  கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதன்படி, முதன்முதலாக உ.பி. மாநிலத்தில்  17 இடங்களை காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும்  ஆம்ஆத்மி இடையே தொகுதி பங்கிடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வந்தன. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க முடியாது என மறுத்து வந்த ஆம்ஆத்மி கட்சி சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் தலையிட்டதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி உதவியுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் டெல்லி குறித்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து,   5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.

அதன்படி, டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டியிடும் என அறிவித்து உள்ளது.

குஜராத் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளும், ஆம்ஆத்மி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிடுகிறது.

கோவா மாநலித்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சண்டிகரில் ஒரு தொகுதியிலும், போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.