சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் முடிவு செய்யப் படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக  அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 3வது கட்ட பேச்சுவார்தையில் முடிவு எட்டப்பட்ட நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எது என்பத   பின்னர் இறுதி செய்யப்படும்  முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக குழுவினர் இன்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுடன் 3வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில், திமுக இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, சிபிஐ மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியார் கொண்ட குழு டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் உடன்  இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.    அப்போது இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.  இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் சிபிஐ கட்சியினர் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இ.கம்யூன்ஸ் தலைவர் முத்தரசன்,  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் முடிவு செய்யப்படும் என கூறினார்.

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தல். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற, மதச்சார்பின்மை கொள்கையைக் காப்பாற்ற ஒன்று பட்டு போராட வேண்டிய அவசியமும் தேவையும் எழுந்திருக்கிறது.  இன்று மத்தியில் அமைந்திருக்கிற ஆட்சி சர்வாதிகார ஆட்சி. இந்த நாட்டை பாசிச பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. இதனை தடுத்து நிறுத்தி மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும், அரசியல் அமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்பட்டு வருகிறது.

கடந்த முறை போலவே: கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதி களிலும் சிபிஐ கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்த நிலையில் தற்போதும் 2 சீட்கள் ஒதுக்கபட்டுள்ளன. கடந்த முறை போட்டியிட்ட அதே 2 தொகுதிகளில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில்,  திமுக – மார்க்சிஸ்ட் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்று வருகிறது. அதுபோல மதிமுகவுடனும்   பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.