டில்லி:

ந்த ஆண்டின் பாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து,  கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள் அடங்கிய, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர்  பிப்ரவரி 1ம்தேதி   2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் முதல் அமர்வு முடிவடைந்தது.

இந்த அமர்வின்போது, இதுவரை மோடி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த தெலுங்குதேசம் கட்சி, ஆந்திராவுக்கு போதிய அளவு நிதி ஒதுக்காதது குறித்து அமளியில் ஈடுபட்டது. இது பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருந்தது.  அதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

அதுபோல குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மோடி ஆவேசமாக பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முந்தைய காங்கிரஸ் அரசு மீது மோடி சாட்டிய குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மோடி குரலை உயர்த்தி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் (வெள்ளிக்கிழமை)  நிறை வடைந்தது.

இதையடுத்து இரண்டாவது அமர்வு அடுத்த மாதம் (மார்ச்) 5ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின்போதுதான் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் மற்றும் முத்தலாக் போன்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள்  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.