மும்பை

றந்த மகனை ஏசு உயிருடன் தருவார் என்னும் நம்பிக்கையில் பிணத்துடன் 10 நாட்கள் பெற்றோர் காத்திருந்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த 17 வயது இளைஞர் மிஷாக் நவ்ஹிஸ் புற்று நோயால் சென்ற மாதம் 27ஆம் தேதி அன்று மரணம் அடைந்துள்ளார்.   அவரது தந்தை ஒரு தேவாலயத்தில் பிஷப் ஆக சேவை செய்பவர்.  மும்பையில் சின்ச்பள்ளி என்னும் இடத்தில் உள்ள அவர் குடும்பத்தினர் அனைவருமே ஏசு மேல் மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள்.    இளைஞரின் தந்தை சேவை செய்யும் தேவாலயம் நாக்படா என்னும் இடத்தில் உள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் அந்த நாக்படா தேவாலயத்தில் மிஷாக்கின் சடலத்தை எடுத்துச் சென்று ஒரு குளிர்பதனப் பெட்டியில் வைத்துள்ளனர்.   ஏசு தங்கள் மகனை பிழைக்க வைப்பார் என தந்தை உறவினர்களிடம் தெரிவித்ததால் அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை நிகழ்த்தி உள்ளனர்.   இது குறித்து யாரோ போலீசுக்கு தகவல் அளித்ததை ஒட்டி அவர்கள் மிஷாக்கின் தந்தையை அழைத்து பிணத்தை வைத்திருப்பது தவறு எனவும்,  உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தி உள்ளனர்.   அவரும் அதை ஒப்புக் கொண்டு தேவாலயத்துக்கு திரும்பி வந்தார்.

ஆனால் மீண்டும் தங்கள் பிரார்த்தனையை அவரும் குடும்பத்தினரும் தொடர்ந்துள்ளனர்.   நேற்று வரை இந்த பிரார்த்தனை நிகழ்ந்துள்ளது.    அடக்கம் செய்யாததை அறிந்த  போலீசார் அந்த தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.  குளிர்பதனப் பட்டியில் உடலை வைத்து குடும்பத்தினர் அந்த இளைஞரை உயிருடன் தருமாறு ஏசுவை வேண்டிக் கொண்டிருந்ததை நேரடியாகப் பார்த்தனர்.

போலீசார் உடனடியாக ஈமச்சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்யாவிடில் தாங்கள் அதைக் கைப்பற்றி அடக்கம் செய்து விடுவோம் என மிரட்டியதைத் தொடர்ந்து  குடும்பத்தினர் ஈமச்சடங்கு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர்.   அதன்பின் அந்த உடலுக்கு கிறுத்துவ முறைப்படி ஈமச்சடங்கு செய்யப்பட்டு போலீசார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.