புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் அலபார்த்தி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த ஆண்டு புளோரிடாவுக்கு ஒருநாள் பயணமாக சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது படகுடன் கட்டப்பட்ட பாராசூட்டில் அவரது மனைவி சுப்ரஜா மற்றும் அவரது மகன் மற்றும் அவரது உறவினரின் மகன் என மூன்று பேர் அந்த பாராச்சூட்டில் பயணம் செய்தனர்.

திடீரென்று வீசிய சூறாவளி காற்றில் படகுடன் கட்டப்பட்ட கயிறு அறுந்து பாராசூட் கட்டுப்பாட்டை இழந்து உயர பறந்து சென்று பாலத்தின் மீது மோதியதில் சுப்ரஜா உயிரிழந்தார் அவருடன் பயணித்த இரண்டு குழந்தைகளுக்கும் எலும்பு முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பாரா-சைலிங் நிறுவனம், படகை ஓட்டியவர் மற்றும் சுற்றுலா நிறுவனம் ஆகியவற்றின் மீது ஸ்ரீனிவாசராவ் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தாங்கள் சிக்காகோ-வில் இருந்து கிளம்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு புளோரிடா-வில் பாரா-சைலிங் செய்வதற்கான வானிலை நிலவுகிறதா என்பது குறித்து விசாரித்துள்ளார்.

அப்படி இல்லையென்றால் தாங்கள் ஓரிரு நாள் கழித்து வரலாமா என்பது குறித்தும் கேட்டுள்ளார். இதற்கு வானிலை நன்றாக உள்ளதாக கூறிய அந்த நிறுவனம் பாராசைலிங் செய்யலாம் என்று கூறியுள்ளது.

இதனாலேயே தாங்கள் அங்கு செல்லவேண்டியதாக இருந்ததாகவும் அந்நிறுவனத்தின் தவறான வழிகாட்டுதலாலேயே தனது மனைவியை இழக்க நேரிட்டதாகவும் ஸ்ரீனிவாசராவ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.