எகிப்தின் ஹுர்காடா கடற்கரையில் குளிக்கச் சென்ற ரஷ்ய வாலிபரை ராட்சத சுறா உயிருடன் விழுங்குவதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

உதவி செய்ய முடியாமல் ஆதரவற்ற நிலையில் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உயிர்காக்கும் வீரர்களுக்கு தகவல் அனுப்பிய நிலையில் ஒன்றும் செய்ய முடியாமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த பயங்கரமான சுறா தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செங்கடல் பகுதியில் உள்ள ஹுர்காடா கடற்கரை உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிரபலமான கடல் ரிசார்ட் நகரமாகும்.

ரஷ்ய இளைஞர் ஒருவர் ராட்சத புலி சுறாவால் கொல்லப்பட்டதாக ஜூன் 8 ம் தேதி ரஷ்ய தூதரகம் உறுதி செய்தது. மேலும், இவர் சுற்றுலா பயணி இல்லை என்றும் இவர் எகிப்தில் வசித்து வரும் ரஷ்ய இளைஞர் என்றும் தெரிவித்துள்ளது.

எகிப்தின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் ரஷ்ய இளைஞர் புலி சுறாவால் கொல்லப்பட்டதாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர் பற்றிய வேறு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

அப்பகுதியில் நீச்சல், ஸ்நோர்கெல்லிங் அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புலி சுறாவை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

கடற்கரையில் எச்சரிக்கையை கேட்டு ஒரு உயிர்காக்கும் வீரர் பாதிக்கப்பட்ட நபரை காப்பாற்ற விரைந்த போதும் அவரை சரியான நேரத்தில் அடைய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

செங்கடலில் உள்ள எகிப்தின் இரண்டு பெரிய கடல் ரிசார்ட் நகரங்களில் ஹுர்காடாவும் ஒன்றாகும், மற்றொன்று ஷர்ம்-எல்-ஷேக். இப்பகுதியில் பவளப்பாறைகள் உள்ளன மற்றும் இரண்டு கடல் ரிசார்ட்டுகளும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளன.

புலி சுறாக்கள் பொதுவாக வெதுவெதுப்பான வெப்பமண்டல மற்றும் மிதமான நீரில் வாழ்கின்றன, மேலும் அவை மனிதர்கள் மீது தூண்டப்படாத தாக்குதலை நடத்தியதாக இதுவரை அறியப்படவில்லை.