ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன், மெளனகீதங்கள் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சூரிய கிரண்(49) சென்னையில் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் தனமாக நடித்துவரும் சுஜிதாவின் அண்ணனான சூரிய கிரண் தற்போது திரைப்படங்களை இயக்குனராக இருந்து வருகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் படம் மூலம் கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சூரிய கிரண்.

கமல் ஹாசனின் கடல் மீன்கள், ரஜினிகாந்தின் ரங்கா, பாக்யராஜின் முந்தானை முடிச்சு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சூரிய கிரண்.

படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினியாக நடித்ததில் இருந்து சூரிய கிரணை குட்டி ரஜினி என்றே ரசிகர்கள் அழைத்தார்கள்.

ரஜினி தவிர சிரஞ்சீவி, நாகார்ஜுன் ஆகியோர் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் இயக்குனர் ஆகும் கனவில் கமலஹாசனிடமும், ரவி தேஜாவிடமும் ஸ்கிப்ட் ரைட்டிங்கை கற்றுக்கொண்டார்.

தெலுங்கில் இவர் இயக்கிய நிஜாம் தேடு செஜாபாலி படம் சூப்பர் ஹிட்டானது.

தமிழில் கவிதா முதல் கல்பனா வரை என்ற படத்தை இயக்கிய சூரிய கிரண் தற்போது வரலட்சுமி சரத்குமாரை வைத்து அரசி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அரசி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இன்று அவர் திடீரென மரணமடைந்தது திரையுலகினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.