மதுரை:

கழிப்பிடம் கட்டாத காரணத்தால் 100 நாள் வேலைக்கு கிராம மக்களை அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தீத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்…

எங்களது ஊரில் 600 பேர் வசிக்கின்றனர். அனைவரும் விவசாய கூலித் தொழிலாளிகள். பருவ மழை பொய்த்தன் காரணமாக இந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 95 சதவீத மக்கள் மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் தீத்தம்பட்டி பஞ்சாயத்தில் பணியாற்றும் எழுத்தர் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்வச் பாரத் அபிநயா மிஷன் திட்டத்தில் மூலம் கழிப்பிடம் கட்டாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தரின் இந்த செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ. 12 ஆயிரம் மூலம் கழிப்பிடம் கட்ட முடியாது. குறைந்த பட்சம் ரூ. 40 ஆயிரம் தேவைப்படும். இந்த பிரச்னையை கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவரின் கவனத்திற்கும், பிரதிநிதிகள் மூலம் கலெக்டரின் கவனத்திற்கும் கடந்த 6ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி இது தொடர்பாக பதிலளிக்க தூத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.