பாலக்காடு

பாலக்காடு ஐ ஐ டி விஞ்ஞானிகள் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்

கேரளாவில் உள்ள பாலக்காடு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனித சிறுநீரில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் ஆய்வக பரிசோதனையில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.

இதையொட்டி மனித சிறுநீர் சேகரிக்கப்பட்டு அதற்கென்று வடிவமைக்கப்பட்ட எலக்ட்ரோ கெமிக்கல் ரிசோர்ஸ் ரெக்கவரி ரியாக்டர் எனப்படும் (இ.ஆர்.ஆர்.ஆர்.) மின்கலத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு மின்சாரமாகவும், நைட்ரஜன், மக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியன அதிக அளவு அடங்கிய இயற்கை உரமாகவும் தயாரிக்கப்படுகிறது.

இதனால் எரிசக்தித் துறையிலும், விவசாயத் துறையிலும் புதிய மாற்றங்கள் உருவாகும் என்று கருதப்படுகிறது. ஆய்வக முறையில் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்ட இந்த பொருட்கள் வர்த்தக முறையில் தயாரிக்க ஏதுவாக ஆய்வுகள் மேம்படுத்தப்படும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போது கிடைக்கும் மின்சாரம் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்யவும், எல்.இ.டி. விளக்குகளை எரிய செய்யவும் முடியும். இத்திட்டத்திற்குத் தேவையான மனித சிறுநீர் திரையரங்கங்கள், மால்கள், மக்கள் கூடும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்படும். இதனால் மறுசுழற்சி முறையில் இயற்கை சக்திகளைப் பயன்படுத்த இயலும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலக்காடு ஐ.ஐ.டி. துணை பேராசிரியை பிரவீனா கங்காதரன் தலைமையில்  பாலக்காடு ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆய்வு மாணவி சங்கீதா.வி, மாணவர் பீ.எம்.ஸ்ரீஜித், திட்ட விஞ்ஞானி ரினோ அண்ணா கோஷி ஆகியோர் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல் துறையினரின் உதவியுடன் இந்த ஆய்வை வெற்றிகரமாகச் செய்துள்ளனர். திட்டத்திற்கு சீட் அமைப்பும், இந்திய அரசும் நிதி உதவி அளித்துள்ளன.