கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான்.

342 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு, ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் அந்த அணியின் பக்கர் ஸமான். அவர் அடித்த ரன்கள் 193. மொத்தம் 155 பந்துகளை சந்தித்த அவர், 10 சிக்ஸர்கள் & 18 பவுண்டரிகளுடன் 193 ரன்களை அடித்து, கடைசியில் ரன்அவுட் ஆனார். மொத்தமாக, 132 ரன்கள் சிக்ஸர்கள் & பவுண்டரிகள் மூலம் வந்துள்ளன.

இதற்கடுத்து, அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம் அடித்த 31 ரன்கள்தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் எனும்போது, ஸமானின் ஆட்டத்தினுடைய முக்கியத்துவம் நமக்குப் புரியும். அணியின் மற்ற வீரர்களுக்கான ஆட்டத்தையும் சேர்த்து, இவர் ஒருவரே ஆடிவிட்டார் என்றும்கூட சொல்லலாம்.

மற்ற வீரர்கள், பந்துக்கு ஒரு ரன் என்று சுமாராக ஆடியிருந்தால்கூட, பாகிஸ்தான் அணி, எளிதாக வென்றிருக்கும். ஆனாலும், இவரின் ஆட்டத்தைப் பார்த்து தென்னாப்பிரிக்க அணியினர் நிச்சயம் மிரண்டுதான் போயிருப்பர்.

முடிவில், 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 324 எடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது பாகிஸ்தான் அணி.