மும்பை: கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, மராட்டிய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால், 14வது ஐபிஎல் தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மராட்டிய மாநிலத்தில், ‍கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதை ஒட்டி, கடந்த ஞாயிறன்று மாலை முதல், கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. எனவே, இதனால் ஐபிஎல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், இதுகுறித்து மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறியிருப்பதாவது, “மும்பை மாநகர கமிஷனரிடம் நாங்கள் தொடர்பு கொண்டோம். அதன்மூலம், கொரோனா கட்டுப்பாடுகளால், ஐபிஎல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டது.

அதேசமயம், ஐபிஎல் தவிர்த்த இதர கிரிக்கெட் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அதேசமயம், ஐபிஎல் போன்ற உயிர் பாதுகாப்பு வளைய அம்சம் கொண்ட எந்த கிரிக்கெட் நடவடிக்கைக்கும் தடை இல்லை என்று கூறப்பட்டுள்ளது” என்றுள்ளார் அவர்.

மும்பையில், 14வது ஐபிஎல் தொடரின் 10 போட்டிகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.