தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம்.

இந்தியாவில் பணிபுரியும் பாகிஸ்தான் தூதரக பணியாளர்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளுமாறு கடந்த 23 ஆம் தேதி அந்த நாட்டுக்கு இந்தியா உத்தரவிட்டது.

இதன் பின்னணி குறித்து இப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்தியாவுக்கு எதிராகச் சதிச்செயல்களில் ஈடுபட , டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஆட்களைத் தேர்வு செய்ததாக உளவுத்துறை கண்டறிந்ததே இதற்குப் பிரதான காரணம் ஆகும்..

இந்த தூதரக அலுவலகம் மூலம் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காகத்  தேர்வு செய்யப்பட்டு, பாகிஸ்தானுக்குத் தீவிரவாத பயிற்சி பெறுவதற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீவிரவாத பயிற்சி பெறுவதற்காக, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 399 காஷ்மீர் இளைஞர்களுக்கு டெல்லியில் உள்ள  பாகிஸ்தான் தூதரகம் விசா அனுமதி வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இவர்களுக்குப் பயிற்சி அளித்து பின்னர் ஆயுதம் கொடுத்து, காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வது, இந்த தூதரக அதிகாரிகளின் நோக்கமாக இருந்துள்ளது.

இந்த பயங்கரவாத செயலுக்கு  ஒரு உதாரணத்தையும் உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான துத்னியால் என்ற இடத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் உள்ள கெரன் பகுதிக்குள் லக்ஷர் –ஈ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த  5 தீவிரவாதிகள் நுழைந்தனர்.

5 பேரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களில்  அலி உசேன், உமர் நிசார் கான், சாஜித் அகமது ஆகிய 3 பேரும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என இப்போது தெரியவந்துள்ளது.

 கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மூவரும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அளித்த விசாவை பெற்று அந்த நாட்டுக்குச் சென்றவர்கள் ஆவர்.

கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் போல் மீண்டும் ஒரு கொடூரமான தாக்குதலை நிகழ்த்தப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை  கண்டறிந்துள்ளது.

-பா.பாரதி.