அரசியல் சர்ச்சையில் பத்ம விருதுகள்…
பாஜ.க.வின் தேர்தல் தந்திரம் என விமர்சனம்
–பாப்பாங்குளம் பாரதி
.
விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் பட்ஜெட்டை மட்டுமில்லாது- மத்திய அரசின் விருதுகளையும் தேர்தல் ஆயுதமாக பா.ஜ.க.எடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
அதில் உண்மை இல்லாமல் இல்லை.

சமூகம்,கலை உள்ளிட்ட துறைகளில் உச்சம் தொட்டவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம’விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு 112 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.இந்த விருதுகளில் அரசியல் விளையாடி இருப்பது விருது பட்டியலை பார்த்தாலேயே தெரிகிறது.
முதலில் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதினை பார்க்கலாம்.

இந்த விருது கடைசியாக கடந்த 2015-ஆண்டு வழங்கப்பட்டது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,கல்வியாளர் மாளவியா ஆகியோருக்கு இவை அளிக்கப்பட்டது, இதன் பின் கடந்த 3 ஆண்டுகளாக யாருக்கும் இந்த உச்ச விருது கொடுக்கப்படவில்லை.
இந்த ஆண்டு 3 ஆளுமைகளுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் நானாஜி தேஷ்முக், அசாம் மாநில பாடகர் புபேன் ஹசாரியா ஆகியோர் அவர்கள். பின்னிருவரும் இப்போது உயிருடன் இல்லை.

இந்த விருதுகளுக்கும்,தேர்தலுக்கும் என்ன முடிச்சு இருக்கிறது?
இருக்கிறது.

பிரணாப் இன்றைக்கும் காங்கிரஸ் காரர் தான்.ஆனால் நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு கடந்த ஆண்டு நாக்பூரில் நடத்திய கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றது காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் நிர்ப்பந்தம் செய்த போதிலும், அதனை பிரணாப் ஒரு பொருட்டாக கருதவில்லை.

கட்சி எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ். மேடையை அலங்காரம் செய்ததற்கான வெகுமதியே –இந்த விருது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பிரணாப்புக்கு ரத்னா வழங்கியதற்கு இன்னொரு காரணமும் வலை தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மே.வங்க மாநிலத்தில் பேர் சொல்லும் படியான தொகுதிகளிலாவது வெல்ல வேண்டும் என்று  பா.ஜ.க.நினைக்கிறது. எனவே வங்காளிகள் ஓட்டை குறி வைத்து ,மே.வங்காள காரரான பிரணாப்புக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அணிவித்திருப்பதாக கூறுகிறார்கள்.

மற்றொரு ரத்னா விருதுக்கு சொந்தக்காரரான –நானாஜி தேஷ்முக்

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் ஆணி வேர். இந்திராவை வீழ்த்திய ஜனதா கட்சியை கட்டமைத்தவர்களில் முக்கியமானவர்.எனவே ஆர்.எஸ்.எஸ்.சின் அங்கமான பா.ஜ.க.- நானாஜியை ,பத்ம விருதுக்கு ‘நாமினேட்’செய்ததில் ஆச்சர்யம் இல்லை.

பாரதரத்னா விருது பெற்றுள்ள மற்றொருவர் –அசாமின் புபேன் ஹசாரியா.பின்னணி பாடகர் ,கவிஞர்,பாடலாசிரியர் என பன்முக தன்மை கொண்டிருந்தாலும் ,இவர் பா.ஜ.க.வின் அசாம் முகம்.கடந்த 2004 ஆம் ஆண்டு பா.ஜ.க.வேட்பாளராக கவுகாத்தி தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்.

செத்துப்போனவருக்கு விருது வழங்கி என்ன அரசியல் செய்ய முடியும் என்கிறீர்களா?

செய்யலாம்.

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்திருப்பதால் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.அந்த பகுதி மக்களின் பேரன்பை பெற்ற ஹசாரியாவுக்கு விருது வழங்கியதன் மூலம் இந்த நெருப்பை ஓரளவு தணிக்கலாம் என்று நினக்கிறது மோடி சர்க்கார்.

இவர்கள் மட்டுமல்ல..

திருவனந்தபுரம் தொகுதி பா.ஜ.க.வேட்பாளராக சித்தரிக்கப்படும் மோகன்லால் உள்ளிட்ட பல பா.ஜ.க.அனுதாபிகளுக்கும் பத்ம விருதுகள் அள்ளி வீசப்பட்டுள்ளன.

–பாப்பாங்குளம் பாரதி