புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க நடத்திய பேரத்தை புலனாய்வு செய்து’ தி இந்து’ ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கட்டுரையை பாராட்டியுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இது குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.


அவரது அறிக்கையின் விவரம்:

ரஃபேல் போர் விமான பேரத்தில் எழுந்துள்ள சர்ச்சையை அமைதியாக அடக்கம் செய்து விடலாம் என மத்திய அரசு நினைத்தது.
அது பொய்யாகிப் போயிருக்கிறது.  அந்த சர்ச்சை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதோடு, இந்த பிரச்சினை தற்சமயம் புதிய பரிமாணத்தையும் பெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க நடத்திய பேரத்தை,  பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் ரத்து செய்தார். மேலும் 36 போர் விமானங்களை வாங்க புதிய ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இதன் மூலம் ஒரு கேள்வி மட்டும் பூதாகரமாக எழுந்தது.

விமானப் படைக்கு 126 போர் விமானங்கள் தேவை(7 படைப் பிரிவுகளுக்கு) என்ற நிலையில், விமானப் படையின் தேவை ஏன் நிராகரிக்கப்பட்டது?. 36 போர் விமானங்கள் மட்டும் ( 2 படைப் பிரிவுகளுக்கு) வாங்க முடிவு செய்தது ஏன்?

இந்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியோ, பாதுகாப்பு அமைச்சரோ, சட்ட அமைச்சரோ, பதில் கூறுவதே இல்லை.

உச்சநீதிமன்றமும் இந்த கேள்விக்குள்ளே செல்ல மறுத்துவிட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கேள்விக்கு ‘தி இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள அற்புதமான புலனாய்வு கட்டுரை மூலம் தற்போது பதில் கிடைத்துள்ளது.

பொதுநலன் கருதி இந்த செய்தியை வெளியிட்ட ‘தி இந்து’ நாளேட்டை பாராட்டுகின்றோம்.

இந்த புலனாய்வுக் கட்டுரையை ஆய்வு செய்து நாம் புரிந்து கொண்டதையடுத்து, பின்வரும் அம்சங்கள் வெளிப்படுகின்றன.

1. 2007-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு போர் விமானத்துக்கு 79.3 மில்லியன் யூரோக்கள் என பேச்சுவார்த்தையின் மூலம் விலையை நிர்ணயித்தது. 2011-ல் ஒரு விமானத்துக்கான விலை 100.85 மில்லியன் யூரோக்களாக உயர்ந்தது.

2016-ல் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின், விலையில் 9 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு விமானத்துக்கு 91 மில்லியன் யூரோ என குறைந்தது.

2. ரஃபேல் போர் விமானத்தில் 13 பிரத்யேக மேம்பாட்டு அம்சங்கள் மேற்கொள்ள (ஐஎஸ்இ) விமானப் படை கேட்டுக் கொண்டது. அதன்படி நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 1,300 மில்லியன் யூரோக்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் செலுத்தப்பட்டது.

3. இந்த விவகாரத்தின் திருப்பமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 13 பிரத்யேக மேம்பாட்டு அம்சங்களுடன் கூடிய 126 விமானங்கள் வாங்க 140 கோடி யூரோக்கள் என்ற அளவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதே 13 பிரத்யேக அம்சங்களுடன் 36 போர் விமானங்களை வாங்க 130 கோடி யூரோக்கள் வழங்க ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தால்தான் விமானம் ஒன்றின் விலை, 41 சதவீதம் அதிகரித்ததாக அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

4. டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் ஒருவேளை 126 விமானங்களை வாங்கியிருந்தால், மாதம் ஒரு விமானம் ‘டெலிவரி’ செய்யப்பட்டால், 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களில் அந்த நிறுவனத்துக்கு 1300 மில்லியன் யூரோக்கள் கிடைக்கும்

அதேசமயம், 2009 மற்றும் 2012- ம் ஆண்டுகளில் 36 போர் விமானங்களை வாங்க அல்லது டெலிவரி செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதைப் பார்த்தால், 36 மாதங்களிலேயே டஸ்ஸால்ட் நிறுவனம் 1,300 மில்லியன் யூரோக்களை வசூலித்துவிடும்.

5. டஸ்ஸால்ட் நிறுவனம் 2 வகைகளில் பயனடைகிறது. ஒன்று, பிரத்யேக அம்சங்களுடன் சேர்த்து 126 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தால், கூடுதலாக 10.3 மில்லியன் யூரோ டாலர் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தத்தின்படி, பிரத்யேக அம்சங்களுடன் 36 போர் விமானங்கள் வாங்க மட்டும் கூடுதலாக 36.11 மில்லியன் யூரோக்கள் செலவாகும்.

இரண்டாவது, அப்போதைய காலக்கட்ட பண மதிப்பை கணக்கிட்டால், 2022-ல் டஸ்ஸால்ட் நிறுவனம் 1,300 மில்லியன் யூரோக்களை வசூலிக்கும். ஐக்கிய முன்னணி அரசு போட்ட ஒப்பந்தத்தின்படி, 2029-ல் டஸ்ஸால்ட் நிறுவனத்துக்கு 1,300 மில்லியன் யூரோக்களே கிடைக்கும்.

குறைந்த ஆண்டுகளில் அதிக லாபத்தை இந்த நிறுவனம் பெறும்.

2015 ஏப்ரல் முதல் 2016 ஆகஸ்ட் வரை போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு டஸ்ஸால்ட் நிறுவனத்துக்கு ‘பரிசு’ கொடுத்துள்ளது.

6. மற்றொரு வழியிலும் டஸ்ஸால்ட் பலன் பெற்றுள்ளது. மேலும் 90 போர் விமானங்களை வாங்க அரசு ஆர்டர் கொடுத்தால், பிரத்யேக அம்சங்களுடன் கூடிய 36 விமானங்களுக்கு நிர்ணயித்த விலையையே இதற்கும் டஸ்ஸால்ட் நிறுவனம் நிர்ணயிக்கும்.

அநேகமாக, இதன் காரணமாகத்தான் அதிக விமானங்களை வாங்கும் போது, முதலில் போடப்பட்ட 50 சதவீத ஆர்டர்களுக்கான விதிமுறை மற்றும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்ற பிரிவை அரசு நீக்கியிருக்கிறது.

7. எல்லா வழிகளிலும் டஸ்ஸால்ட் நிறுவனத்துக்கு கூடுதல் ஆதாயம் அளிப்பதாகவே உள்ளது. 2 வழிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டுக்கு தவறிழைத்துள்ளது.

முதலாவதாக, விமானப்படைக்கு மேலும் 90 விமானங்கள் தேவை என்ற கோரிக்கையை நிராகரித்ததின் மூலம் நாட்டின் பாதுகாப்பு சமரசம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 2 படைப் பிரிவுகளுக்கு மட்டும் வாங்கும் தலா ஒரு போர் விமானத்தின் விலை 25 மில்லியன் யூரோக்கள். 2016-ம் ஆண்டு செலவானி விகிதத்தின்படி, 25 மில்லியன் யூரோக்கள் என்பது, நமது நாட்டின் மதிப்பின்படி ரூ.186 கோடிக்கு சமம். அதாவது ஒரு போர் விமானம் வாங்க இந்தியா ரூ.186 கோடி கொடுக்கப் போகிறது.

8. பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு எடுக்கும் நடவடிக்கைகளை’தி இந்து’ நாளேடு தன் கட்டுரையில் கேள்வி எழுப்புகிறது.

பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கெட்டிக்காரர். அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க கேபினட் குழுவிற்கு தள்ளிவிட்டு தப்பித்திருக்கிறார். அவரது செயல்பாட்டை இப்போது நாம் விமர்சிக்க விரும்பவில்லை.

எனினும், ஒவ்வொரு போர் விமானம் வாங்குவது தொடர்பாக முடிவு எடுக்கும்போது, 4-3 என்ற விகிதத்தில் அமைந்த வாக்கெடுப்பு, அரசுக்கு சாதகமாக நடந்துள்ளது. நிர்பந்தம் மற்றும் வலுக்கட்டாயப்படுத்தியதை மீறி அதாவது, அரசின் முடிவை எதிர்த்து வாக்களித்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற 3 அதிகாரிகளை அவசியம் பாராட்டியே ஆகவேண்டும்.

9. முடிவு எடுக்க .4-3 என்ற வாக்கெடுப்புக்கும் ஒரு கதை உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் வாங்கும்போது இதுபோன்று எப்போதாவது நடந்துள்ளதா? இதுபோன்ற முக்கிய பேரங்களில் ஒவ்வொரு ஆட்சேபனைகளையும் புறந்தள்ளிவிட்டு, 4-3 என்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் ஏன் முடிவுகளை எடுக்கவேண்டும்.?

ரஃபேல் விமான பேரம் குறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.