ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை – நாளை நமதே என ஓபிஎஸ் அறிக்கை…

Must read

சென்னை; அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால், நாளை நமதே  என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடங்களுக்கு ஓபிஎஸ் சென்று மரியாதை செலுத்தினார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில்,  அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும். ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என உத்தரவிட்டார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது. ஈபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்  எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பால், இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. ஓபிஎஸ் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. இதுதொடர்பாக ஓபிஎஸ், நாளை நமதே என அறிக்கை வெளியிட்டு,  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தற்காலிகமான வெற்றி  என்று கூறப்பட்டாலும், இந்த வெற்றி ஓபிஎஸ்-ஐ அடுத்த நகர்வுக்கு தைரியமாக அழைத்து செல்லும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு தங்களது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஓ.பி.எஸ் சென்று மரியாதை செலுத்தி விட்டு வந்துள்ளார்.

More articles

Latest article