சென்னை

சென்னையில் பல நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் பல நடைபாதைகளில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள சிமெண்ட் பலகைகள் பெயர்த்து அதற்குப் பதிலாக கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.   இதை எதிர்த்து முன்னாள் அமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஓ பன்னீர் செல்வம், “ஏற்கெனவே சென்னையில்  நல்ல நிலையில் இருக்கும் நடைபாதைகளில் இருந்து கற்கள், சிமென்ட் கற்களைப் பெயர்த்து குப்பையில் வீசிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய கிரானைட் கற்கள் பொருத்தப்படுவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

நடைபாதையில் ஏற்கெனவே இருந்த கருங்கற்கள், சிமென்ட் கற்களாலான நடைபாதைகள் அனைத்து தரப்பினரும் நடக்க ஏதுவாக இருந்தன.  மேலும் மழைக்காலத்திலோ, தண்ணீர் தேங்கி இருந்தாலோ, இந்த நடைபாதைகள் சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்தன.

தற்போது உள்ள கிரானைட் கற்களாலான நடைபாதைகள் சறுக்கும் தன்மையுடன் உள்ளன.  ஆகவே மூத்த குடிமக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் நிலை தடுமாறும் சூழல் உள்ளது.   ஆகவே நடைபாதைக்குப் பதிலாக சாலை ஓரத்தில் நடந்து செல்வதாகப் பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

நல்ல நிலையில் இருக்கும் நடைபாதைகளைப் பெயர்த்து வீசுவதால், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில், அரசுப் பணம் வீண், மக்களுக்கு அச்சம் என்ற இரட்டிப்பு பாதிப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

திட்டங்கள் மக்களுக்காகவே தவிரத் திட்டங்களுக்காக மக்கள் அல்ல. மக்களின் வரிப் பணத்தை வீணாக்குகிற, மக்களுக்கு அச்சத்தையும், விபத்துகளையும், அதன்மூலம் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிற இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதில் உடனே முதல்வர் கவனம் செலுத்தி, உண்மை நிலையைக் கண்டறிந்து, பாதசாரிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து, அரசுப் பணம் வீணாவதைத் தடுத்து, பாதசாரிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.