சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களில் ஏரைளமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளதால்,  அதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க உத்தரவிட்டு உள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி,  கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இதில் ஒரே நபர் பல கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளதும், வசதியான பலர், முறைகேடான வகையில் நகைக்கடன் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அனைத்து கூட்டுறவு மண்டல மேலாண் இயக்குநர்களுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், 5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு உத்தர பிறப்பித்துள்ளது.

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு வங்கிகளில் விதிகளை மீறி நகைக்கடன் பெற்றிருந்தால், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நகைக்கடன் தொகையை வசூலிக்க வேண்டும்.

அதாவது,  5 சவரனுக்கு அதிகமாக பெறப்பட்ட நகைக்கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் ,

5 சவரனுக்கு அதிகமான நகைக்கடன்களின் தவணையை கட்ட தவறியவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.