புதுடெல்லி:
குடியரசு துணைத் தலைவருக்கான எதிா்க்கட்சிகளின் வேட்பாளரைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 கான கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி-க்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பி-க்களில் 388 எம்பி-க்கள் வாக்களித்தால் குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஜெக்தீப் தங்கர் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிா்க்கட்சிகளின் சாா்பில் குடியரசு துணைத் தலைவருக்கான பொது வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.