கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்தியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட இருப்பதாக இன்று காலை தகவல்கள் பரவின. அதற்கு ஏற்றார்போல, அவர் மம்தா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து, சரத்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மம்தா பானர்ஜி மற்றும்  காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், யஷ்வந்த் சின்ஹாவை குடியரசு தலைவர் தேர்தலுக்கான பொதுவேட்பாளராக நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்படுவார் என்று நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக டிவிட் பதிவிட்டுள்ள சின்ஹா, மம்தாஜி எனக்கு வழங்கிய மரியாதை மற்றும் கௌரவத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியிலிருந்து விலகி அதிக எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முதலில் மத்திய நிதி அமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் 2021 இல் திரிணாமுல் காங்கிரஸில் சேருவதற்கு முன்பு 2018 இல் பாஜகவிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி