டெல்லி:

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வதுஅமர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஏற்கனவே டிசம்பர் 31ந்தேதி தொடங்கியது, பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, விவாதங்கள் நடைபெற்று பிரப்ரவரி 11ந்தேதியுடன் முதல் அமர்வு முடிவடைந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி உள்ளது. இதற்கிடையில்,  டெல்லி நடைபெறற்ற இனக்கலவரம், வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க ஆம் ஆத்மி, இந்திய கம்யூ.,மார்க்சிஸ்ட் கம்யூ. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின்போது பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கிறார். மேலும், நடப்பு தொடரில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்ட 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் எனத் தெரிகிறது.