சென்னை

நாளை சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை திறக்க உள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார்.   அதைத் தொடர்ந்து முதல்வர் பதிவிக்கு பல குழப்பங்கள் நிகழ்ந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உள்ளார்.

பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவின் உருவப் படத்தை சட்டசபையில் திறந்து வைக்க தீர்மானம் இயற்றப்பட்டது.    அதை ஒட்டி நாளை சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.   ஸ்டாலின், “ஊழல் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” எனக் கூறி உள்ளார்.

பாமக வின் இளைஞரணி தலைவர் அன்புமணி, “ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் திறப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.   தேவைப்பட்டால் நாங்கள் இதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம்”  என தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், “ஜெயலலிதா குற்றவாளி என உச்சநிதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளார்.   எனவே அவருடைய படத்தை பேரவையில் திறக்கக் கூடாது”  எனக் கூறி உள்ளார்.