கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு? சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 கிலோ பறிமுதல்… பொதுமக்கள் அதிர்ச்சி…

Must read

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா உள்பட போதை பொருளை ஒழிக்கும் வகையில், ஆபரேசன் கஞ்சா 2.0 என்று அறிவித்து வேகமாக நடவடிக்கை எடுத்த டிஜிபி, அதை தொடர்கிறாரா என்ற சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9 கிலோ கஞ்சாவை , போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மூலை முடுக்கெல்லாம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை காலேஜ் மாணவர்கள், பொறுக்கிகள் மட்டுமே உபயோகப்படுத்தி வந்த கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் தற்போது பள்ளி மாணவர்களும் பயன்படுத்தும் அளவுக்கு பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிவிப்பில்,  “கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள் விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0′ என்ற பெயரில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தொடர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து சில நாட்கள் அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பிரமிக்கும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருந்தாலுர் கஞ்சா நடமாட்டம் தொடர்ந்துகொண்டேதான் வருகிறது.

இந்த நிலையில், தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சென்னையின் பிரதான பகுதியான சென்ட்ரல் அருகே உள்ள  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 9கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரும் ஒரு பிரபலமான மருத்துவமனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவ மனையில், கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்துள்ள நிகழ்வு,வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக காவல்துறை விழிப்புடன் பணியாற்றுகிறதா அல்லது ஒப்புக்கு சப்பானியாக பணியாற்றுகிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிஜிபியின் கஞ்சா வேட்டை 2.0 என்னாச்சு…?  தினசரி பல கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதாக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையில், அவை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடித்து, முழுமையாக தடுக்க முன்வராதது ஏன் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

எதிர்க்கட்சியினரையும், அரசை விமர்சிப்பவர்களையும்  கைது செய்வதில், தீவிர ஆர்வம் காட்டும் காவல்துறை, கொஞ்சம் பொதுமக்கள் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தினால் நல்லது. இல்லையேல்  ஏற்கனவே டாஸ்மாக்கு அடிமையாகி உள்ள இளையதலைமுறையினர், கஞ்சாவுக்கும் அடிமையாவதை தவிர்க்க முடியாது…

More articles

Latest article