வசூலை குறைத்து காட்டுகிறார்கள்: திரைப்பட துறையினர் இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை….

Must read

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சிண்டிகேட் அமைத்து திரைப்படங்களின் வசூலை குறைத்து காட்டுகிறார்கள் என  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சொதனை குறித்து வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. திரைப்பட பைனான்சியர் அன்புசெழியன், தாணு  மற்றும் நடிகர் சூர்யாவின் பினாமாக கூறப்படும் ஞானவேல்ராஜா உள்பட பலரது வீடுகள், அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது,  திரைப்படத்துறையில் கணக்கில் காட்டப்படாமல் 200 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் புழங்குவது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருமானவரித்துறை சார்பில் இன்று அறிக்கை வெளியிடபபட்டு உள்ளது. அதில்,  கடந்த 02.08.2022 அன்று திரைப்படத் துறையில் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களோடு  தொடர்புடைய 40 இடங்களில், அதாவது, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள இடங்களில்  வருமானவரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பைனான்சியர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு கணக்கில் காட்டப்படாத பணக் கடன்கள் வழங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தின் வியாபாரம் குறித்து வழக்கமான கணக்கு புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட தொகைக்கும் அந்த படம் வெளியீட்டின்போது உணரப்படும் உண்மை யான வியாபார தொகைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக கூறியுள்ள வருமானவரித்துறை, இவ்வாறு கணக்கில் காட்டப்படாமல் ஈட்டப்படும் வருமானம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வாங்குவதற்கும் கணக்கில் காட்டப்படாத பணப்பட்டுவாடாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தியேட்டர்களில் வசூல் ஆகும் தொகையை உரிய முறையில் கணக்குகாட்டாமல் ஈட்டப்படும் வருமானம் குறித்த ஆவணங்கள் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைபற்றப்பட்டுள்ளது.

திரைப்பட விநியோகஸ்தர்கள் தங்களுக்கென்று ஒரு சிண்டிகேட் அமைத்து அதன் மூலம் தியேட்டர்களில் வசூலாகும் தொகையை குறைத்துக்காட்டுவதும் இந்த சோதனையின்போது தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் மூலம் கண்டறியப்பட்ட கணக்கில் காட்டப்படாத வருமானம் 200 கோடி ரூபாயை தாண்டுவதாகக் தெரிவித்துள்ளதுடன், சோதனையின்போது,  கணக்கில் காட்டப்படாத 26 கோடி ரூபாய் ரொக்கம், மற்றும் 3கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய தங்க நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article