சென்னை

காலத்தின் கட்டாயம் ஆரணமாக வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது அவசியம் எனக் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  இடையில் ஒரு சில வகுப்புக்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் இரண்டாம் அலை கொரோனா காரணமாக மீண்டும் மூடப்பட்டன.  கடந்த இரு வருடங்களாக பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

பள்ளிகள் நீண்ட காலமாக திறக்கப்படாததால் பலர் தங்கள் குழந்தைகளைக் கூலி வேலைக்கு அனுப்பத் தொடங்கினர். குறிப்பாகச் சிவகாசி போன்ற ஊர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வேலைக்குச் சென்று பொருளீட்டத் தொடங்கி உள்ளனர்.  இவர்களில் பலர் கையில் தாராள பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதால் சிலர் மது போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது.  பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில் கல்வி நிறுவனங்களைத் திறக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்   இணையங்கள் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும் கிராமப்புற மாணவர்களுக்கு இணைய வசதி கிடைக்காமல் வகுப்புக்களைக் கவனிக்க இயலவில்லை.

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சுழற்சி முறையில் செப்டம்பர் 1 முதல் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளார்.   இது குறித்து கல்வியாளர் ஒருவர், “பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகப் போக இடைநிற்றல் அதிகரிக்கும்.  வருமானமின்றி தவிக்கும் பெற்றோர் தமது குழந்தைகளை வேலைக்கு அனுப்பி விடுவார்கள்.

எனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பது காலத்தின் கட்டாயமாகும்.  இது நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானதாகும்.  பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து ஆல் பாஸ் பெற்ற மாணவர்களை பணிக்கு எடுக்கத் தயங்கும் வாய்ப்பு உள்ளது.  ஆகவே தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அரசு எடுத்த முடிவு சிறப்பானது” எனத் தெரிவித்துள்ளார்.