டில்லி

ணைய செய்தி ஊடகங்களின் கட்டுப்பாடு குறித்த மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்து 100 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை சமீபத்தில் இணையப் பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்களை கட்டுக்குள் கொண்டு வர  ஏற்கனவே உள்ள பத்திரிகை நெறிமுறிகளை அமுல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின.   இது இணைய பத்திரிகையாளர்கள் இடையே பரபரப்பை உண்டாக்கியது.   ஏற்கனவே இந்தத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி சர்ச்சைக்குரிய உரிமம்  பறிப்பு சட்டத்தை அறிவித்து அதற்கு எதிர்ப்புக்கள் எழுந்ததால் அதை பிரதமர் திரும்பப் பெற்றது தெரிந்ததே.

நேற்று மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் தற்போதிய இணைய பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.   அவர்கள் அக்கடிதத்தில், “பத்திரிகை நடைமுறைகளை இணைய ஊடகங்களுக்கும் அமுல்படுத்த உள்ளது பொருந்தாத நடவடிக்கை ஆகும்.   செய்திப் பத்திரிகைகளில் தற்போது உரிமம் பெறுதல்,  செய்திகள் கட்டுப்பட்டு உள்ள பல நெறி முறைகள் உள்ளன.

இணைய ஊடகங்கள் என்பது உலகெங்கும் வேறு முறையில் இயங்கி வருகிறது.    இணையத்தில் மறமுகமற்ற நேரடி செய்திகள் பதியப்படுகின்றன.    பல அரசு குறித்த மற்றும் அரசு சம்மந்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் சுதந்திரமாக வெளியிடுகின்றன.   இவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது ஊடக ஜனநாயகத்துக்கு எதிரான செய்கை ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ”தி ஒயர்” இணைய அமைப்பாளர் வேணு, “இணைய தளங்களான முகநூல் மற்றும் கூகுள் தற்போது தங்களின் அமைப்பை மிகவும் மாற்றிக் கொண்டுள்ளன.   தற்போது அந்த தளங்கள் எந்த ஒரு அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கிடையாது.   சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.   அந்த ஒரு ஜனநாயகத் தன்மை அனைத்து ஊடகங்களுக்கும் தேவை”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே கருத்தை பிரபல இணைய பத்திரிகையாளர்களான கீதா சேஷு, மது திரெஹன்,  சீமா முஸ்தபா, ராகவ் பஹல்  உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்.