புதுடெல்லி: தனது துணை நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், மங்களூரு ரீஃபைனரி அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் இணைப்பை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி.
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, கடந்த 2018ம் ஆண்டு, எச்பிசிஎல் நிறுவனத்தை, ரூ.36 ஆயிரத்து 915 கோடிக்கு கையகப்படுத்தியது. எச்பிசிஎல் நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், ஓஎன்ஜிசி வசம் இரு சுத்திகரிப்பு துணை நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த இரு நிறுவனங்களையும் இணைக்கும் முயற்சிகள் துவக்கப்பட்டன. தற்போது, அது தள்ளிப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது; இரு நிறுவனங்களின் இணைப்பினால் மிகுந்த பலன் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இருப்பினும், இந்த இணைப்புக்கு முன், எம்ஆர்பிஎல் நிறுவனத்தை, ஓஎம்பிஎல் எனும் ஓஎன்ஜிசி மங்களூரு பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளோம். இது முடிந்த பிறகுதான், எச்பிசிஎல் மற்றும் எம்ஆர்பிஎல் நிறுவன இணைப்புக்கான முயற்சிகள் எடுக்கப்படும். எனவே, இவற்றின் இணைப்பு அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.