பெண் பத்திரிகையாளர் குறித்து எஸ்.வி. சேகர் அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ₹15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபராதத் தொகையை செலுத்திய எஸ்.வி. சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.