ஒரே நாடு ஒரே சட்டம் – தீர்ப்புகள் மட்டும் பலவிதம்

வாழப்பாடி இராம. சுகந்தன்

 
ராஜஸ்தானில் 19 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில்.
இதே போன்று 2017 ம் ஆண்டு தமிழக முதல்வர் எட்டப்பாடிக்கு எதிராக 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி ஆளுநரிடம் மனுகொடுத்தபோது நடந்த சம்பவங்களும் அதனைத் தொடர்ந்து எடுக்கப் பட்ட முடிவுகளையும் ஒப்பீடு செய்வோம்.

தமிழகத்தில் 2018 ம் ஆண்டு அக்டோபர் இல் சட்டம் தனது தீர்ப்பை எப்படி வழங்கியது ?

தமிழகத்தில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அ.இ.அ.தி.மு.க. வினர் சில மாதங்களே ஆட்சி செய்த நிலையில்.
2017 பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ். தனி அணி அமைத்து    தமிழகத்தில் உச்சபட்ச குழப்பம் நீடித்தது, அதன் விளைவாக எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்தது.
பின்னர் நடந்த சமரச பேச்சில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட தினகரன் தலைமையில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு 19 அ.இ.அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.க்கள் 22 ஆகஸ்ட் 2017 அன்று ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது புகாரளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவை தலைவர் நோட்டீஸ் அனுப்பிய  நிலையில், ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன் ஆஜராகி விளக்கமளித்தார், மீதமுள்ள தங்கத்தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்து அவர்கள் 18 பேரும் நீதிமன்றத்தை நாடினர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.   தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “அரசியலமைப்பில் பேரவைத்  தலைவருக்கு தரப்பட்ட அதிகாரத்தில் நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே தலையிட முடியும். இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது.
மனுதாரர்கள் தங்கள் தரப்பில் முதல்வர், அரசு கொறடா மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு தரவில்லை என்று வாதிட்டுள்ளனர். இது இயற்கை நியதிக்கு முற்றிலும் முரணானது.  பேரவைத் தலைவர் மீது மனுதாரர்கள் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. உரிய விசாரணைக்குப் பிறகே அவர் முடிவு எடுத்துள்ளார். எனவே, பேரவைத் தலைவரின் முடிவில் இந்த நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை”  என்று கூறியிருந்தார்.
நீதிபதி எம்.சுந்தர் அளித்த தீர்ப்பில், “ மனுதாரர்கள் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்ததால் அவர்கள் என்ன எதிர்பார்த்துள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா  உத்தரவை மீறி அவர்கள் முதல்வருக்கு எதிராக வாக்களிக்கவில்லை. எஸ்.டி.கே.ஜக்கையன் விஷயத்திலும் மனுதாரர்கள் விஷயத்திலும் பேரவைத் தலைவர் இருவேறு முடிவுகளை எடுத்துள்ளது இயற்கை நியதிக்கு எதிரானது.  மனுதாரர்களுக்கு தங்கள் விளக்கங்களைத் தர உரிய வாய்ப்பு தரவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் முடிவு தவறானது” என்று கூறியிருந்தார்.
பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில், “ஆட்சியைக் கவிழ்க்கவே மனுதாரர்கள்  திட்டமிட்டு ஆளுநரிடம் புகார் கொடுத்தனர். கட்சியின் பெயருக்கு பொது மக்கள் மத்தியில் உள்ள பெயரை கெடுத்துள்ளனர். எஸ்.டி.கே.ஜக்கையன் பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு பதில் தரும்போது தனது நிலையை அரசுக்கு  ஆதரவாக மாற்றினார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேரவைத் தலைவர் நியாயமாகவே செயல்பட்டுள்ளார்” என்று வாதிட்டார்.
இரண்டு நீதிபதிகளும் இருவேறு மாறுபட்ட தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதை வழக்கின் இறுதித் தீர்ப்பில் நீதிபதி சத்யநாராயணா, “18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும். சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதி நீக்கம் சட்ட விரோதம் இல்லை. சபாநாயகர் உரிய கால அவகாசம் கொடுத்து, சரியான நடைமுறையை பின்பற்றி தகுதி நீக்கம் செய்து உள்ளார். அரசு கொறடா பிறப்பித்த உத்தரவின் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது” என்று கூறியிருந்தார்.

தற்போது ராஜஸ்தானில் நடப்பது என்ன ?

ராஜஸ்தானில் 19 எம்எல்ஏக்கள் ஆதரவுடனும்  பா.ஜ.க.வின் துணையுடனும் ஆட்சி அமைக்கும் கனவில் இருக்கும் சச்சின் பைலட் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக களமிறங்கி இருக்கிறார்.
சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருக்கும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதற்கு விளக்கமளிக்காமல் காலம் தாழ்த்திவரும் சச்சின் பைலட் அணியினரையும் பா.ஜ.க.வின் சூழ்ச்சியையும் முறியடிக்க சட்டசபையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் எண்ணியிருந்தார். அதற்காக சட்டசபையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா விடம் அனுமதி கோரிய போது அவர் சட்டசபையை கூட்ட 21 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கிரண் பேடி கணக்காய் ஒற்றை காலில் நிற்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சச்சின் பைலட் தரப்பு நீதிமன்றத்தை நாடி சபாநாயகர் தங்களுக்கு உரிய அவகாசம் வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் கடந்த 6 ஆண்டுகளில் நடந்தது என்ன ?

மத்தியில் பா.ஜ.க. அரசு கடந்த 2014 ம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் மாநில அரசுகளின் உரிமைகளை பறித்தும், தங்களின் கைப்பாவையாக செயல்படும் தலைமையையே மாநில அரசுகளின் தலைமையாக நியமிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 2018 ம் ஆண்டு கர்நாடகாவில் இதே போன்ற ஒரு சூழலில் ஆளும் எடியூரப்பா தலைமையிலான அரசு 15 நாட்கள் அவகாசம் கோரி உச்சநீதி மன்றத்தை நாடிய போது ஏ.கே. சிக்ரி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய  உச்ச நீதி மன்ற பெஞ்ச் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரே நாள் அவகாசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறியதை அடுத்து பெரும்பான்மையை நிரூபிக்காமலே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதுமட்டுமல்ல, 2020 மார்ச்சில், மத்திய பிரதேச ஆளுநர் நள்ளிரவு 1 மணிக்கு கமல்நாத்தை அழைத்து 6 மணிநேரத்தில் சட்டமன்றத்தைக் கூட்ட சொன்னார். ம.பி. அரசு கவிழ்ந்த உடனே முதல் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார்.ஆனால் ராஜஸ்தான் ஆளுநருக்கு சட்டமன்றத்தைக் கூட்ட 21 நாட்கள் அவகாசம் வேண்டுமாம் !
ம.பி.  சட்டம் ராஜஸ்தானுக்கு பொருந்தாதா?
பெரும்பான்மை இல்லாமல் இருப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தை ஆக்கிரமித்து குழப்பத்தை விளைவித்து வருவது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேதனையளிப்பதாக உள்ளது.