சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2022,2023ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருது தமிழ்நாடு அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருது ஞா.மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), கவிஞர் இலக்கியா நடராசன் (படைப்புத்தமிழ்) மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான இராமலிங்கம் (மரபுத்தமிழ்), கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), முனைவர் சூர்யகாந்தன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும். தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது.

அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பெறுவார்கள்.

இலக்கியமாமணி விருது 2022ம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரங்க. இராமலிங்கம்-வயது 68 (மரபுத்தமிழ்).

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் வயது 83 (ஆய்வுத்தமிழ்),

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) – வயது 67 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பெற்று உள்ளனர்.

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜீணன் -வயது 70 (மரபுத்தமிழ்). திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடம்-வயது 77 (ஆய்வுத்தமிழ்). சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன்-வயது 74 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர்.

2023ம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன்- வயது 94 (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் வயது 73 (ஆய்வுத்தமிழ்). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் -வயது 64 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.