சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில்  மேலும் 2 குற்றவாளிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இரண்டு பேர் மீது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவர்கள் இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரர் கோவிலில் அதிகாலையில்  கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஜமீஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கை முதலில்  கோவை போலீசார் விசாரித்த நிலையில்,  பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணையில் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பது தெரியவந்தது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க தேவையான ரசாயன பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ‘பொட்டாஷியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர்’ உட்பட, நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான சில மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் பட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடர்பான ஆவணங்களும் கைது செய்யப்பட்ன. மேலும், முபினுடன் பலர் தொடர்பில் இருந்ததும், இவ்ர்கள் அனைவரும் தடை செய்ப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக பல பகுதிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்ட என்ஐஏ, பலரை கைது செய்து விசாரணை நடத்தியது. இதில், கைது செய்யப்பட்ட 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள்மீது ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கடைசியாக அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் மீதான குற்றப் பத்திரிகை இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 13 பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முகமது அசாருதீன் என்ற அசார், வேறொரு பயங்கரவாத வழக்கில் என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2019ல் நம் அண்டை நாடான இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதேபோல், முபீனின் நெருங்கிய நண்பரான முஹமது இத்ரிஸ் என்பவர் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பில் பயன்படுத்திய காரை வாங்க முபீனுக்கு உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும், குண்டுவெடிப்பில் பலியான முபீனை சந்தித்து குண்டுவெடிப்பு தொடர்பான திட்டத்தை வகுத்ததும், இதுபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

கைதாகியுள்ள 13 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.