டெல்லி: ‘ஒமிக்ரான் வைரஸ்’ பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வான பி.1.1.529 வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தென்னாப்பிரிக்கா நாட்டில் பரவலாக பரவி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. வீரியம் மிக்க இந்த வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளையும், கண்காணிப்புகளையும் தீவிரப்படுத்த உள்ளன.

இந்த வைரஸ் குறித்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன்  அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் நிர்வாகிகளுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஒமிக்ரான் வகை வைரஸ் பரவி வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி கடைடிப்பதை உறுதி செய்ய வேண்டும், , கொரோனா தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.