ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி அசாதாரணமானவை முதலில் சிகிச்சையளித்த தென் ஆப்பிரிக்க டாக்டர் தகவல்

Must read

போட்ஸ்வானா நாட்டில் உருமாறி தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள B.1.1.529 கொரோனா வைரஸ் அசாதாரணமான அறிகுறியை கொண்டது என்று தென் ஆப்பிரிக்க மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான பிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும்,புதிய உருமாறிய கொரோனா குறித்து முதலில் கண்டறிந்த, அஞ்செலிக் கோட்ஸி என்ற மருத்துவர் டெலிகிராப் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

தன்னிடம் வந்த நோயாளிகளில் 20 க்கும் மேற்பட்டோர் புது வகையான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளவர்கள் என்று கூறிய அவர், அவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணி மற்றும் இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அழற்சி உள்ளிட்ட அசாதாரண அறிகுறிகளுடன் வந்த இவர்களில் ஆறு வயது குழந்தை ஒன்றுக்கு நாடித் துடிப்பு அதிகரித்து காணப்பட்டதாக கூறினார்.

ஒருவருக்கொருவர் அறிகுறிகள் மாறுபட்டிருந்தாலும் மிதமான பாதிப்பையே ஏற்படுத்தி இருந்ததாக தெரிவித்த அவர், இவர்களில் யாருக்கும் சுவையின்மை மற்றும் வாசமின்மை போன்ற அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் வயதானவர்களின் எண்ணிக்கை பொதுவாக குறைவு என்பதால், வயதானவர்களுக்கு இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கூறமுடியவில்லை.

இருந்தபோதும், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உணரப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நவம்பர் 18 ம் தேதி உடல் சோர்வு அறிகுறியுடன் தன்னிடம் வந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளைப் பரிசோதித்ததில் புது வகையான வைரஸ் இருப்பது தெரியவந்தது, உடனடியாக இதுகுறித்து தேசிய தடுப்பூசி முகமைக்கு தகவலளித்ததாக அவர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டன், இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றவர்களுக்கும் இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேல்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

More articles

Latest article