புதுடெல்லி:

2 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை தாருங்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான அஸ்லம் ஷெர் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாடியவர் அஸ்லம் ஷெர் கான்.
சர்வதேச விளையாட்டிலும் அரசியலிலும் அவருக்கு அனுபவம் உண்டு.

கடந்த மே 25-ம் தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

எனினும் அவரது ராஜினாமா முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது.

இந்நிலையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்தால், 2 ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை ஏற்க தான் விரும்புவதாக அஸ்லம் ஷெர் கான் தெரிவித்தார்.

உலகக் கோப்பையில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற தான் காரணமாக இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், தனது அனுபவம் காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்க தகுதியாக இருக்கும் என்றார்.

கடந்த 1996-ம் ஆண்டு பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்ததையும், 2 முறை எம்பியாக இருந்ததையும் அஸ்லாம் ஷெர் கான் ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மத்திய பிரதேச காங்கிரஸார் கானின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அவர் தற்போது கட்சியிலேயே இல்லை என்றும், கட்சிக்காக அவர் எதையும் செய்ததில்லை என்றும் கூறியுள்ளனர்.

அஸ்லம் ஷெர் கானின் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.