பெங்களூரு

பெங்களூரு மெட்ரோவில் ஒரு முதியவர் அழுக்கு உடையுடன் வந்ததால் பயணிக்க மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பெங்களூரு ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டார். அதில் அழுக்கு சட்டை மற்றும் வேட்டி அணிந்தபடி தலையில் மூட்டையுடன் முதியவர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் என்று அங்கு பணியில் இருப்போரிடம் கூறுகிறார்.

அங்கிருந்த மெட்ரோ ரெயில் நிலைய பாதுகாப்பு மேற்பார்வையாளர், அந்த முதியவரை உள்ளே அனுமதிக்க மறுப்பதுடன் அவரிடம் கடுமையாகப் பேசி அங்கிருந்து வெளியேறக் கூறி எச்சரிக்கிறார்.  அங்கிருந்த சில பயணிகள் முதியவருக்கு ஆதரவாக மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு மேற்பார்வையாளரிடம் பேசி அவரது செயலை கண்டிக்கிறார்கள்.  அவர்கள் அந்த முதியவரை மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்கிறார்கள்.

அந்த முதியவரும் மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்கிறார். அவர் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ காட்சிகள் ல் வைரலாகின.  இதை கண்ட  பலரும் மெட்ரோ ரயில் நிலைய ஊழியரின் நடவடிக்கையைக் கண்டித்து இருந்தனர்.

தற்போது இதில் சம்பந்தப்பட்ட அந்த மெட்ரோ ரயில் நிலைய கண்காணிப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஷ்வர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.