சென்னை

த்திய அரசு ரயில்வே பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் 21 வாரியங்களைத் தேசிய சோதனை அமைப்பின் கீழ் மையப்படுத்த முயற்சி எடுக்க உள்ளது.

ரயில்வே துறையில் சி மற்றும் டி பிரிவுகளின் கீழ் வரும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பமற்ற பணியிடங்களுக்கான பணிக்கு 21 வாரியங்கள் தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்கின்றன.  இவை 16 மண்டல ரயில்வே காலியிடங்களை நிரப்பத் தேர்வுகள் நடத்துகின்றன.    இதில் சென்னை, சேலம் மற்றும் திருச்சி பிரிவுகளுக்குச் சென்னை வாரியம் ஆட்களைத் தேர்வு செய்கிறது.  திருவனந்தபுரம், பாலக்காடு பிரிவுகளுக்குத் திருவனந்தபுரம் மண்டலம் தேர்வு செய்கிறது.

இந்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மறுசீரமைப்பின் மையப்படுத்தலின் ஒரு பகுதியாகும்.  இதையொட்டி முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், ”மத்திய அரசுக்கு ஆள்சேர்ப்பு பணிகளைச் செய்யும் தேசிய சோதனை அமைப்பின் (என் டி ஏ) கீழ் அனைத்து ரயில்வே ஆள்சேர்ப்பு வாரியங்களையும் கொண்டு வந்து மையப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதால்  இனி வாரியங்களுக்குத் தேவை இல்லை என அறிவித்துள்ளார்.

மேலும் சஞ்சீவ் ரயில்வே ஆள்சேர்ப்பு தேர்வுகளை என் டி ஏ மூலமே நடத்தலாம் எனவும்  இதற்காக ரயில்வேவில் ஒரு சிறிய டிஜிட்டல் அலுவலகம் மற்றும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.  இது மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தம் என்னும் பெயரில் அமைப்புக்களை மையப்படுத்தும் அரசியல் முடிவு என ஆர்வலர்களால் விமர்சிக்கப்படுகிறது.

இது குறித்து அரியானா மாநில கோடரின்  ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி தேவசகாயம், “மத்திய அரசின் இந்த திட்டம் முழு அமைப்புக்களையும் அழிக்கும்.   இதன் மூலம் நாடெங்கும் பலர் பயன்பெறுவதற்குப்  பதிலாக வட இந்தியர்கள் மட்டுமே பயன்பெற வழி வகுக்கும்.  இது தென் இந்திய மாநிலங்களில் இந்தியைத் திணிக்க நடக்கும் மற்றொரு முயற்சியாகும்.

எடுத்துக்காட்டாக தற்போது விமான நிலங்களில் உள்ள  பெரும்பாலான பணியாளர்கள் இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து இந்த என் டி ஏ மூலம் நியமிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.  இவர்களில் ஒருவரால் கடந்த ஆண்டு திமுக எம் பி கனிமொழி இந்தி பேசாததால் அவமானப்படுத்தப்பட்டார்.  மேலும் இவர்களால் விதிமுறைகளை மீறாத போதே நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.” எனக் கருத்து கூறி உள்ளார்.