லக்னோ: ராகுல்காந்தி உள்பட 3பேர் உ.பி. வர யோகி தலைமையிலான பாஜக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடையை மீறி வருவேன் என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, உ.பி. அரசு அனுமதி வழங்கி உள்ளது.

லக்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களுக்கு உத்தர பிரதேச உள்துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படு கிறது.  இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதற்கிடையில்,  வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சிஆர்பிசி 151-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லக்கிம்பூர் கெரி மற்றும் லக்னோவுக்கு  வெளியாட்கள் யாரும் வரக்கூடாத வகையில் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

இந்தத் தடையை மீறி இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சத்தீஸ்கர், பஞ்சாப் முதல்வர்கள் செல்ல உள்ளதாக இன்று காலை செய்தி யாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறியிருந்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் லக்கிம்பூருக்கு வருவதற்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்னவிதமான சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள்? உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது, ஏன் உ.பி. செல்லும் இந்தியர்கள் தடுக்கப்படுகிறார்கள். ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், தற்போது உ.பி. மாநில பாஜக அரசு, க்கிம்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர்களுக்கு உத்தர பிரதேச உள்துறை அனுமதி அளித்துள்ளது.