வாஷிங்டன்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான ஓசிஐ பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓசிஐ எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும் இந்தியர்கள்’ என்ற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது, இந்திய குடிமகனுக்கு உள்ள பெரும்பாலான உரிமைகளை வழங்குகிறது.

இந்த பாஸ்போர்ட் வைத்துள்ள வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், வாழ்நாள் முழுதும், ‘விசா’ இன்றி எத்தனை முறை வேண்டுமாலும் இந்தியா வந்து செல்லலாம். ஆனால் அவர்களுக்கு, இந்திய குடிமகனுக்கு உள்ளதுபோல ஓட்டுரிமை கிடையாது. அரசு வேலையில் சேரவோ, விவசாய நிலம் வாங்கவோ முடியாது. அவர்களில், 20 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோர், ஒவ்வொரு முறை பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும்போது, கூடவே சேர்த்து ஓசிஐ பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்க வேண்டும்.

ஓசிஐ பாஸ்போர்ட் வைத்துள்ளோர், ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட் உடன், புதிய பாஸ்போர்ட்டும் எடுத்துவர வேண்டும்.

கடந்தாண்டு, கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணியர், இந்தியா வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களின் ஓசிஐ புதுப்பிப்பு காலம், பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இருந்தபோதிலும், ஓசிஐ வைத்திருந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர், தாயகம் திரும்ப விமான நிலையம் வந்தபோது, விதிகளின்படி, அவர்களிடம் காலாவதியான பழைய வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தப் பிரச்சினை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, குறிப்பிட்ட சில வகை, ஓசிஐ பிரிவினர் மட்டும் இந்தியா வர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள், ஓசிஐ கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான, ஓசிஐ பாஸ்போர்ட் புதுப்பிப்பு காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள், இந்தியா செல்ல, புதிய பாஸ்போர்ட் உடன், காலாவதியான பழைய பாஸ்போர்ட் எடுத்து வர தேவையில்லை. ஓசிஐ இல் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் அடிப்படையில், அவர்கள் பயணிக்கலாம். அதேசமயம், அவர்கள் கண்டிப்பாக புதிய பாஸ்போர்ட் கொண்டு வந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.