மதுரை: தசரா பண்டிகை மற்றும்  தீபாவளியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தாம்பரம் – நாகர்கோவில் அதி விரைவு சிறப்பு ரயில் (06001) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அக்டோபர் 25-ல் இயக்கப்பட இருக்கும் நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040) சாத்தூர் தவிர மற்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.