சென்னை:

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே 32 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். சசிகலா தரப்பு நெருக்கடி கொடுத்து வந்தாலும் மத்திய அரசு, திமுக ஆதரவுடன் முதல்வர் பதவியில் தொடர்ந்தார் பன்னீர்செல்வம். நெருக்கடி அதிகமானதால் வேறுவழியின்றி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது மத்திய அரசுக்கும், திமுகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை அவர் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே திரும்பி நிற்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வரவுள்ளது. இதை கருத்தில் கொண்டே சசிகலா பதவியேற்பை தாமதப்படுத்துகிறது மத்திய அரசு. மத்திய அரசும் திமுகவும் நெருக்கடி தரத் தொடங்கியிருப்பதால் ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக செயல்பட தயாராகிவிட்டாராம்.

அதிமுகவில் உள்ள அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 32 பேருடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஓபிஎஸ் அணியும் திமுகவும் கைகோர்த்து ஒரு அரசாங்கத்தை உருவாக்கினால் சசிகலா முதல்வராவதைத் தடுத்துவிடலாம் என்பது தான் மத்திய அரசின் புது திட்டமாம்.