15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம் போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரண்டு நோய்களிலிருந்தும், வாழ்நாள் முழுவதும் குழந்தைகளை பாதுகாக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“இந்த தடுப்பூசி போட்ட ஒரு வாரத்துக்குப் பின்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். வழக்கமாக தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகள் தான் இவை.

இதனால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். ரூபல்லா தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரண்டு நோய்களிலிருந்தும் குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கலாம்.” என்று அரசு தெரிவித்துள்ளது.

அங்கன்வாடி மையங்கள், பால்வாடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் கடந்த 6-ஆம் தேதி முதல் வரும் 28-ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரூபெல்லா தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதனால் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு பெற்றோர்களிடம் தயக்கம் நிலவுகிறது.

இந்த நிலையில், ரூபெல்லா தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை களைய, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் சிறப்பான முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில், தொடங்கிய தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தொடக்கி வைக்க வந்தபோது, தனது மகள்கள் ஹர்சினி மற்றும் ஜோதிகா ஆகியோரையும் அழைத்து வந்தார்.

துவக்க விழா முடிந்தவுடன், இந்த சிறுமிகள் இருவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் நிர்மல்ராஜ், “ரூபெல்லா தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே எனது மகள்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துவந்து ஊசி போட வைத்தேன்” என்றார்.

நிர்மல்ராஜ் போலவே, அரசு முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் குறிப்பாக அமைச்சர்களும் தங்கள் குடும்பத்து குழந்தைகளுக்கு இதுபோல அனைவரும் அறியும்படி தடுப்பூசி போட்டால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுமே என்று திருவாரூர் மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்.
.