சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதாவது அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதில்,  சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள்  என மொத்தம் 27 வேட்பாளர் கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், ஒவ்வொரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்தல்களில் வேட்புமனு, ஓட்டுப்பதிவு, தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும்.  மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பல்வேறு விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. வேட்புமனு தாக்கல் முதல் வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை வரை பல்வேறு விதிகளை வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டும். S

அதன்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் கட்சி சார்ந்து அல்லது சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை முறைப்படி தாக்கல் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி இதனை அனைத்து வேட்பாளர்களும் பின்பற்றுவது அவசியமாகும். இதற்காக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதை தாக்கல் செய்யாவிட்டால் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதாவது தேர்தல் செலவு தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யாத பட்சத்தில் அந்த வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து களமிறங்கிய செந்தில் குமார் மற்றும்  2021 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் என மொத்தம் 27 பேர் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு, கடந்த 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தல் செலவு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்காமல் டிமிக்கி கொடுத்த திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் பிரபு, அதேதொகுதி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகேசன் ஆகியோர் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சகுந்தலா, சென்னை சைதாப்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் இளங்கோ, வெங்கடேஷ், சென்னை விருகம்பாக்கம் தொகுதி அண்ணா திராவிட மக்கள் கழக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோருக்கும் 3 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 27 பேர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.