சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நடப்பாண்டு சென்னையில் பெய்த மழைக்கு 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், இரவு முழுவதும் பெய்த கனமழையால், ஆவடி காவல் நிலையம் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் மூழ்கியது. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் தேங்கிய தண்ணீரானால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில்,  தேங்கிய பகுதிகளில் உள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். இதற்கிடையில் மழை பாதிப்பு காரணமாக சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கனமழை காரணமாக சென்னையில் இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அசோக் நகரில் சாலையில் செல்போன் பேசியபடி சென்ற மணிகண்டன் (23) என்பவர் உயிரிழந்தார். செல்போன் கருகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோல, தி.நகரில் மின்கம்பம் அருகே மழைக்கு ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி 35 வயதான நபர் உயிரிழந்தார். மின்கம்பத்தோடு ஒட்டிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.